«  
தேடல்: 2 2

சேனல் மாற்றுவதில் கணவருடன் சண்டை... 3 வயது குழந்தையைக் கொன்ற தாய்... கர்நாடகாவில் கொடூரச் சம்பவம்!

கணவருடன் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையில், கணவருக்கு ஆதரவாக இருந்த 3 வயது குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுதா (26) என்ற பெண், டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவர் ஈரண்ணா தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு வினுதா என்ற 3 வயது மகள் உள்ளார்.

நேற்று முன்தினம் 2 மணியளவில் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவருடைய மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். உடனே டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிய ஈரண்ணா, செய்தி சேனல் வைத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, எந்நேரமும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் கோபமாகப் பேசியுள்ளார்.

அப்போது 3 வயது குழந்தை வினுதா தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியுள்ளார். "அப்பாவே டி.வி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது" என குழந்தை தெரிவித்ததால் கடும் கோபமடைந்த சுதா தன்னிலை மறந்து குழந்தையை கொலை செய்திருக்கிறார்.

பின்னர், எதுவும் அறியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தனது மகள் தொலைந்து போனதாக அவர் புகார் கொடுத்துள்ளார்.

கட்டுமானப்பணி நிறைவடையாத கட்டிடம் ஒன்றில் குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், மகளை காணவில்லை என புகார் கொடுத்த பெற்றோரை வரவழைத்து விசாரித்த போது தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் சுதா.

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையில், பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...

கணவரை பிரிந்து வாழ்வதால் பறிக்கப்பட்ட Mrs.Srilanka அழகி பட்டம்!

இலங்கை, கொழும்பிலுள்ள நெலம் போகுனா மஹிந்த ராஜபக்‌ஷே திரையரங்கில் கடந்த ஞாயிறன்று திருமதி இலங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. இலங்கை மட்டுமின்றி பிற நாட்டு அழகிகளும் இதில் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த போட்டி அமைப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் இலங்கையைச் சேர்ந்த அழகி புஷ்பிகா டி சில்வாவிற்கு திருமதி இலங்கை அழகிப் பட்டத்தை அளித்தனர்.

திருமதி இலங்கை அழகி போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாகத் திருமணம் முடிந்திருக்க வேண்டும் என்பது இப்போட்டியின் விதிமுறையாகும். அதுமட்டுமின்றி கணவருடன் இணைந்து வாழ்பவர்களுக்கு மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியுமென்ற மேலும் ஒரு விதிமுறையும் உள்ளது. இந்நிலையில் சற்றும் எதிபாராத வகையில் புஷ்பிகா டி சில்வா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து 2019ம் ஆண்டின் திருமதி இலங்கை அழகியான கரோலின் ஜூரி மேடையில் அழகிப்பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பறித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குக் கிரீடத்தைச் சூட்டினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புஷ்பிகா டி சில்வா கண்ணீருடன் மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றார். மேலும் இவரை அவமானம் செய்ததற்காகப் ஈபோட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் கரோலின் ஜூரி மீதும் புகார் அளிக்கப்போவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருமதி இலங்கை அழகிப்போட்டியின் தேசிய இயக்குநர் சண்டிமால் ஜெயசிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், புஷ்பிகா டி சில்வா கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும் சட்டரீதியாக இன்னும் விவாகரத்து செய்யவில்லை. கரோலின் ஜூரி அவரை அவமானம் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் செவ்வாய்கிழமையன்று கிரீடத்தை மீண்டும் புஷ்பிகா டீ சில்வாவிடம் திருப்பிக்கொடுக்கவுள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க ...

விசாரணையின்போது நீதிபதி முன் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி.. பகீர் பின்னணி !!

இந்தியா, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவர் மீது இருக்கும் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார்.

அப்போது, அவரிடம் நீதிபதி கேள்விகளை எழுப்பினர். திடீரென அழுத பாண்டியன் சிறையில் தன்னை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார். பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென தான் கையில் மறைத்துவைத்திருந்த பிளேடால் நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் விசாரணை அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். அப்போது தனக்கு நடக்கும் கொடுமை தொடர்பாகத் தான் கடிதம் எழுதி தருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்.

பின்னர் சிகிச்சைக்காக கைதி பாண்டியனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

  »